சரித்திர சாகசம் –
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

சரித்திர சாகசம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேலூர் என்றதும் நினைவுக்கு வருவது வேலூர் சிறைச்சாலையே . ஆனால் சரித்திரத்தில் வேலூர் சிப்பாய்ப் புரட்சி என்பது குறிப்பிடத்தக்கது . நமது நாட்டில் ஆங்கிலேயனை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் என்பது 1857 ல் நடைபெற்றதைக் குறிப்பிடுவார்கள் . இதனை ஆங்கிலேய தாசர்கள் சிப்பாய் கலகம் என்று அழைத்தார்கள்.

ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் இதனை ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற முதல் சுதந்திரப்போர் என்றே குறிப்பிட்டுள்ளார் . இதற்கும் ஆண்டுகளுக்கும் முன்பாகவே வேலூரில் ஆங்கிலேயனை எதிர்த்து ராணுவ வீரர்கள் புரட்சி செய்தார்கள் . அதுதான் வேலூர் சிப்பாய்ப் புரட்சி என்று அழைக்கப்பட்டது . அதில் பலியான வீரர்களின் சமாதி இன்றும் வேலூர் கோட்டைக்கு முன்பு அமைந்துள்ள சர்ச் வளாகத்தில் காணப்படுகிறது .

 

ஜலகண்டேஸ்வரர் கோயில்:

வேலூர் நகரில் சுற்றிலும் அகழிகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய கோட்டை இருக்கிறது . இந்த கோட்டையின் உள்ளே ஒரு பிரம்மாண்டமான கோபுரத்துடனும் , சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த கோயில் உள்ளது . திம்மரெட்டி , பொம்மிரெட்டி எனும் சிற்றரசர்கள் கட்டியது . அதற்கு ஜலகண்டேஸ்வரர் கோயில் என்று பெயர் .

திப்பு சுல்தானின் படையெடுப்பில் வேலூர் கோட்டை முஸ்லீம்கள் வசம் வந்தன . அவர்கள் கோயிலைச் சூறையாடினார்கள் . சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டன . நல்ல வேளை நமது முன்னோர்கள் இதை எதிர்பார்த்து கருவறையில் உள்ள மூலவரை ( சிவலிங்கத்தை ) அங்கிருந்து ரகசியமாக அப்புறப்படுத்தி வேலூர் அருகில் உள்ள சத்துவாச்சாரிக்கு கொண்டுபோய் விட்டார்கள் . அங்குள்ளவர்கள் ஒரு சிறிய கோயில் கட்டி அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர் .

கோயில் ராணுவ முகாமாயிற்று :

முஸ்லீம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து நமது நாட்டில் ஆங்கிலேய ஆட்சி வந்தது . அவர்கள் காலத்தில் வேலூர் கோட்டையை வீரர்கள் தங்கும் படைத் தளங்களாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள் . கோயில் வளாகம் வெடிமருந்து கிடங்காகவும் , குதிரைகள் கட்டும் லாயங்களாகவும் பயன்படுத்தி வந்தார்கள் .

ஆங்கிலேய கிறிஸ்தவர்ஆட்சியிலும் கோயிலில் மூலவர் இல்லாததால் வழிபாடுகளும் , பூஜைகளும் இல்லாமல் தொடர்ந்தது . கோயில் வளாகத்தில் நீதிமன்றம் , கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

1947 - ல் நாடு விடுதலை பெற்றது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாததால் அன்றைய நமது மத்திய அரசு தொல் பொருள் இலாகாவின் கீழ் கோயில் நிர்வாகத்தைக் கொண்டு வந்தது .

கிருபானந்தவாரியாரின் முயற்சி:

வேலூரைப் பற்றி வேடிக்கையாக , மன்னன் இல்லாத கோட்டை,. தண்ணீர் இல்லாத ஆறு ( மிகப் பிரம்மாண்டமான பாலாறு உள்ளது . ஆனால் அதில் தண்ணீரைப் பார்ப்பது அபூர்வம் ) அதிகாரம் இல்லாத போலீஸ் (வேலூரில் தான் போலீஸ் பயிற்சி மையம் , இருந்தது . பயிற்சியின் உள்ள அவர்களும் அதிகாரம் கிடையாதுதானே ) சாமி இல்லாத கோயில் என்று இன்னும் இதுபோல அடுக்கிக் கொண்டே போவார்கள் .

வேலூர் கோட்டை கோயிலில் மீண்டும் மூலவரை வைத்து வழிபாடுகளைக் கொண்டு வர தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன . அதில் கிருபானந்தவாரியார் செய்த முயற்சி குறிப்பிடத்தக்கது . அந்தக் காலத்தில் வேலூர் மக்கள் ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி கிருபானந்தவாரியார் வசம் ஒப்படைத்தார்கள் . வாரியார் அவர்கள் டெல்லி சென்று பல நாட்கள் தங்கியிருந்து அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களையும் , மத்திய தொல்பொருள் இலாகா அமைச்சரையும் சந்தித்து மத்திய அரசின் அனுமதியைப் பெற முயற்சித்தார். உங்களுக்கு அனுமதி கொடுத்தால் இதுபோன்ற தொழுகை, வழிபாடு இல்லாத பல மசூதி , சர்ச்சுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டியதிருக்கும் . எனவே அனுமதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

வாரியார் சுவாமிகள் வருத்தத்துடன் ஊர் திரும்பினார் . மக்கள் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்துவிட்டார் . அந்தப் பணத்தைக் கொண்டுதான் வேலூர் டோல்கேட் அருகில் இருக்கும் வாரியார் திருமண மண்டபம் கட்டப்பட்டது . அது இன்றும் உள்ளது .

இந்து முன்னணியின் முயற்சி:

ஹிந்துக்களுக்காக வாதாட , போராட 1980 - ல் ஹிந்து முன்னணி துவக்கப்பட்டது . அதன் அமைப்பாளராக வீரத்வி இராம.கோபாலன் பொறுப்பேற்றுக் கொண்டார் . ஹிந்து முன்னணியை வேலூரில் துவங்குவதற்காக இராம.கோபாலன் வந்திருந்தார் . அன்று பல நகரப் பிரமுகர்களை சந்தித்துப் பேசினார் . அப்போது ஜலகண்டேஸ்வரர் கோயில் பற்றிய பேச்சு வந்தது . தெய்வம் இல்லாத கோயில் என்று சொல்வது நமக்கு அவமானமாகும் . எனவே வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமியை பிரதிஷ்டை செய்து மீண்டும் வழிபாடுகளைத் துவக்குவது வேலூர் மாவட்ட இந்து முன்னணியின் திட்டமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தார் .

வேலூர் கோட்டை மைதானத்தில் 1981 ஜனவரி மாதம் ஒரு பெரிய ஹிந்து முன்னணி பொதுக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பேசிய இராம.கோபாலன் ஜலகண்டேஸ்வரர் கோயில் மீண்டும் வழிபாட்டு ஸ்தலமாக மாற வேண்டியதின் அவசியத்தைப் பற்றி பேசினார் . இதற்காக வேலூரில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன . இந்தப் பணியில் ஈடுபாடு உடையவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

கலெக்டரின் உதவிக்கரம்:

கர்நாடகாவைச் சேர்ந்த திரு கங்கப்பா என்பவர் வேலூர் கலெக்டராக பொறுப்பேற்றிருந்தார் . அவர் ஒருநாள் வேலூர் நகர ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் . பெரிய ஆச்சரியம் என்னவென்றால் கோயிலில் சாமியை பிரதிஷ்டை செய்யும் முயற்சிக்கு கலெக்டர் முழு ஆதரவு தர உறுதி அளித்தார் . இதுவும் இறைவனின் திருவருளே. சுவாமி பிரதிஷ்டை எந்தவித குறைபாடும் இல்லாமல் நடைபெற கலெக்டர் பங்களாவில் அவரது வீட்டிலேயே ஒரு ஹோமம் நடைபெற்றது . இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது . கமிட்டியில் மயிலை குருஜி சுவாமிகள் , ஏ.எஸ்.ஏ. பேக்கரி உரிமையாளர் பரமசிவம் , மணிமுதலியார் , வெல்லமண்டி புலாபாய் தேசாய் , ஏழை முனிசாமி , மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கமிட்டியில் இடம் பெற்றனர் .

திரும்பி வந்த ஜலகண்டேஸ்வரர்:

ஜலக கண்டேஸ்வரர் கோயிலின் மூல விக்கிரஹமான சிவலிங்கம் சத்துவாச்சாரியில் இருந்தது . இதுதான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம் என்பதை தொல்பொருள் இலாகா ஏற்கனவே ஊர்ஜிதம் செய்திருந்தது . சத்துவாச்சாரி மக்களிடம் பேசி அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது . சுவாமி பிரதிஷ்டைக்கான தேதி குறிக்கப் பட்டது .

15-03-1981 அன்று இரவு தேர்ந்தெடுத்து 50 பேர் சத்துவாச்சேரியில் இருந்த லிங்கத்தை பெயர்த்தெடுத்து லாரியில் ஏற்றினார்கள். லாரியில் வேலூர் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டது . இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அன்பர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு காலையில் அனைவரும் ஒன்று கூடி 1981 - மார்ச் - 16 ம்தேதி திங்கள் கிழமை ஹரஹர மகாதேவ், வெற்றிவேல் வீரவேல் என்று கோஷங்கள் முழங்க சாமி பிரதிஷ்டை வெற்றிகரமாக முடிந்தது .

உடனடியாக வேலூர் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன . அதில் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் துவங்கிவிட்டன . பக்தர்களே வாரீர் என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன . சுவாமி பிரதிஷ்டையாகி விட்டது என்று ஆட்டோ மூலமும் பிரச்சாரம் நடந்தது .

தாமதமாக செய்திகளைக் கேட்ட போலீசாரும் குவிந்தனர் . மக்களும் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வருகை தந்தனர் . போலீஸ் லிங்கத்தை அப்புறப்படுத்த முயற்சித்தபோது கலெக்டர் அதனால் சட்டம் , ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்று சொல்லி அந்த முயற்சியைத் தடுத்து விட்டார் .

400 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மேளதாள நாதஸ்வர ஓசை கேட்கிறது .

எம்.ஜி.ஆரின் ஆதரவு:

இந்த செய்தி அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது . தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் . உள்ளுர மகிழ்ச்சி அடைந்து , கோயில் வழிபாட்டிற்கு எந்த இடையூரும் கொடுக்கவேண்டாம் காவல்துறைக்கு உத்தரவிட்டார் .

மதுரையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் மாநாட்டின் போது அவருக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசை வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார் . அதை இன்றும் கோட்டை கோயில் வளாகத்தில் காணலாம் .

உலக வெற்றி விழா:

ஏப்ரல் 5 - ம் தேதி கோட்டை மைதானத்தில் வெற்றி விழா நடைபெற்றது . இவ்விழாவில் இராம.கோபாலன் இந்து முன்னணி தமிழ்நாடு தலைவர் தாணுலிங்க நாடார் , மற்றும் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜி.விஸ்வநாதனும் எம்ஜியாரிடம் அனுமதி பெற்று விழாவில் கலந்து கொண்டார் .

அன்று கோட்டை மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தது . மக்கள் வெள்ளத்தால் கூட்டம் நிரம்பி வழிந்தது . ஒரு மாத காலம் கோயில் நிர்வாகத்தை இந்து முன்னணி பொறுப்பாளர்களே கவனித்து வந்தனர் . அதன்பிறகு முறைப்படி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது . அதில் வேலூர் ஆர்.எஸ்.எஸ் . மாவட்ட தலைவராகவும் , இந்து முன்னணியின் மாவட்ட தலைவராகவும் இருந்த ஏழை முனிசாமி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார் .

400 ஆண்டுகாலமாக தெய்வமில்லாத கோயில் என்று இருந்த அவப்பெயர் நீக்கப்பட்டு அன்றாட வழிபாடுகள், பூஜைகள் துவங்கின. காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் , திரு.முருக கிருபானந்தவாரியார் ஆர்.எஸ்.எஸ் . அகிலபாரத தலைவர் பாளா சாகேப் தேவரஸ் , திரு அத்வானி ஆகியோர் வருகை தந்து வழிபட்டனர்.

அவன் அருளாலே:

வேலூர் ஜலகண்டேஸ்வரர் வெற்றி என்பது ஹிந்து எழுச்சிக்கு கிடைத்த வெற்றி . ஹிந்து ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி . பெயர் தெரிந்த , தெரியாத எண்ணற்றோர் இந்த முயற்சியில் கைகொடுத்தனர் . இதுபற்றி ஒரு பெரியவர் இது எப்படி சாத்தியமாயிற்று ? என்று கேட்டார் . அவருக்கு நாம் கொடுத்த பதில் இது ஜலகண்டேஸ்வரரின் ஏற்பாடு . அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று திருவாசக வரிகளுக்கேற்ப இறைவனின் அருளால் இந்த அற்புதம் நடைபெற்றது .

விசுவ ஹிந்து பரிஷத் அயோத்தியில் மீண்டும் ராமர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரம் ஊட்டுவது போல ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை நடைபெற்றது . இந்து முன்னணி துவங்கிய இரண்டாவது வருடத்திலேயே இது ஒரு மாபெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க